Home / இன்றைய செய்திகள் / விமான விபத்து: 219 உடல்களை கடத்திய கிளர்ச்சியாளர்கள்- ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!!

விமான விபத்து: 219 உடல்களை கடத்திய கிளர்ச்சியாளர்கள்- ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!!

a76c273a-83ca-4241-9153-fb79679fd094_S_secvpfநெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற பயணிகள் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் தரையில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர். இதுவரை விமான விபத்தில் பலியான 219 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த உடல்களை டோரஷ் என்ற இடத்தில் குளிர்சாதன ரெயில் பெட்டியில் வைத்துள்ளனர். அதற்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றை டொனெஸ்ட் நகருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை உக்ரைன் துணை பிரதமர் வொலோடிமிர் குரோய்ஸ்மேன் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட உடல்களை மீட்க கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஆனால் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வரும் டொனெஸ்ட்க் மக்கள் குடியரசு அமைப்பின் பிரதமர் அலெக்சாண்டர் போரோடாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிதறி கிடந்த விமான பாகங்களுடன் கருப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டன. அவை பத்திரமாக உள்ளன. அதே போன்று மீட்கப்பட்ட உடல்களை கிளர்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவை குளிர்சாதன வசதியுடைய ரெயில் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உடல்களை ஒப்படைக்க காலதாமதம் ஆகலாம்.

எனவே கடும் வெப்பம் காரணமாக உடல் அழுகி சேதம் ஏற்படும். மேலும் அப்பகுதியில் நாய்கள் மற்றும் காட்டு விலங்குகள் நடமாட்டமும் உள்ளது. அவை விபத்தில் பலியானவர்களின் உடல்களை கடித்து தின்று நாசம் செய்துவிடும். அதனால் உடல்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர் என்றார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பேட்டி அளித்தார்.

அப்போது, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா பெருமளவில் ராணுவ உதவி அளித்துள்ளது. அவர்களுக்கு டாங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரஷியாவின் எஸ்.ஏ. 11 ஏவுகணை சிஸ்டம் மூலம் தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்க பயன்படுத்தியுள்ளனர். அவற்றை வழங்கியதற்கான டெலிபோன் உரையாடல் ஆதாரம் கிடைத்துள்ளது.

அவை தவிர கிளர்ச்சயாளர்களுக்கு ரஷியா ராணுவம் பயிற்சி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ரஷியாவுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் மேலும் பொருளாதார தடை விதிக்க இருப்பதாக அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோவிஸ், ஹோலன்டே, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரும் ரஷிய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைனில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும்படி தெரிவித்துள்ளனர். மீட்பு குழுவினரையும், கண்காணிப்பு குழுவினரையும் விபத்து நடந்த இடத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: