Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ராஜேந்திரசோழன் அரியணை ஏறி 1000–ஆவது ஆண்டு நிறைவு விழா!!

ராஜேந்திரசோழன் அரியணை ஏறி 1000–ஆவது ஆண்டு நிறைவு விழா!!

99962162Untitled-1ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000–ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார்.

அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூட்டி கொண்டார். மன்னரான இவர் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி சுமார் 30 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். அத்துடன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்.

இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்து வந்தான்.

தனது தந்தை ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை போன்று, 4 ஏக்கர் பரப்பளவில் 160 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தையும் மிகவும் பிரமாண்டமான சிவலிங்கத்துடனும், கலை நயத்துடனும் கட்டினான். எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட இந்த கோவிலின் கட்டுமானம் தற்கால பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற நகருக்கு மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தான்

கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாக விளங்கியது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாமன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறி 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடல் கடந்தும் தமிழனின் ஆட்சியை நிறுவிய ராஜேந்திரனை கொண்டாடும் விதமாக கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் மற்றும் விழா குழுவினரும் இன்றும், நாளையும் (25) சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விழாவையொட்டி இன்று காலை மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது. இதன் முதல் பிரதியை தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் சுந்தரமூர்த்தி, குலோத்துங்கன் ஆகியோர் வெளியிட சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை தலைவர் அசேந்திரன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து காலை 10 மணி முதல் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்புகள், ஆட்சி முறைகள் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டு துறை முன்னாள் தலைவர் ராசு, என்ஜினீயர் கோமகன், மதுரை பாண்டிய நாட்டு வரலாற்ற பேரவை தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கம், ராசவேலு ஆகியோர் பேசினர்.

மாலை 6 மணிக்கு மங்கள இசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் நாளை காலை 8 மணிக்கு தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தீபச்சுடர் ஓட்டம் நடக்கிறது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைக்கிறார். தீப ஜோதியை எழுத்தாளர் பாலகுமாரன் ஏற்றி வைக்கிறார். இந்த ஓட்டத்தில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த தீபச் சுடர் ஓட்டம் மாளிகை மேடு பகுதியில் உள்ள அரண்மனையில் நிறைவடைகிறது. அங்கு தமிழ் அறிஞர்கள் பாராட்டப்பட்டு கோவிலுக்கு யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு திட்டக் குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலாநாயர் தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: