Home / செய்திகள் / இந்திய செய்திகள் / மாணவர்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டால் வறுமையை ஒழிக்கலாம்: ஜனாதிபதி பேச்சு!!

மாணவர்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டால் வறுமையை ஒழிக்கலாம்: ஜனாதிபதி பேச்சு!!

23dbe1b6-bc03-4a57-9383-2d195a1b736e_S_secvpfதிருச்சியை அடுத்த துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) பொன்விழா கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்டு நீர் மேலாண்மையை வெளிப்படுத்தும் கல்லணை, 90 டன் எடையில் ஒரே கிரானைட் கல்லில் கும்பம் கொண்ட தஞ்சை கோவில், அக்கால பொறியியல் தொழில் நுட்பத்திற்கு சான்றுகள். நாட்டிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி. அதிக எண்ணிக்கையில் அதிக அளவிலான பொறியாளர்களை உருவாக்கி வருகிறது.

தேசிய தொழில்நுட்ப கழகங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் உதவி இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்த வளர்ச்சியை இவை அடைந்திருக்கிறது.

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இணைந்து படிக்கும் வகையில் அதன் கல்வி முறைகள் அமைந்துள்ளன. மைக்ரோ காஸ்மிக், பாரத் வளாகங்களாக தேசிய தொழில் நுட்ப கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ– மாணவிகள் பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக உருவாக்கப்படுகிறார்கள். இவர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள். இந்திய கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி., தேசிய தொழில்நுட்ப கழகங்கள் (என்.ஐ.டி.) முன்தரவரிசை பெற்ற கல்வி நிறுவனங்களாக செயல்படுகின்றன.

கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு ஆய்வின்படி உலகின் தலை சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் கட்டிடக் கலை மற்றும் மின்னணு பொறியியல் துறைகளில் நாட்டிலுள்ள இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) தலைசிறந்த 50 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதே போல பிரிக்ஸ் நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தலைசிறந்த 20–ல் 5 கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் உள்ளது. ஆசியாவின் தலை சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் கடந்த 2013–ம் ஆண்டில் 3 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 10 ஆக உயர்ந்துள்ளது.

வருங்காலத்தில் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் உலக அளவில் தரவரிசை இடங்களை பிடிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவிலான இடங்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உத்வேகங்களை அளிக்க வேண்டும்.

இந்தநிலை மூலம் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்ப்புகள் உள்ளிட்ட ஏராளமான பலன்களை அடைய முடியும். இந்திய தொழில்நுட்ப கழகங்களின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டு கோலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியில் நமது நாடு மேலும் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் நமது நாட்டில் செய்யப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மூலம் தகவல்களை, அறிவுசார் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை வளாகங்களுக்கு வெளியேயும் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் திருச்சி என்.ஐ.டி. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்த நிறுவனத்தை இணைய வளாகமாக உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட தரமான கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. தேசிய தொழில்நுட்ப கழகங்கள் மாணவர்களின் விஞ்ஞான மனோபாவங்களை ஊக்கு விப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது பொறியியல் தொழில்நுட்பத்தை சாதாரண விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழிபுரிவோர் பயன்படும் வகையில் விரிவாக்கம் செய்யவேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும் இறங்க வேண்டும். இதன்மூலம் நாட்டின் பின்தங்கிய நிலையையும், ஏழ்மையையும் போக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழக கவர்னர் ரோசய்யா ‘வியக்கத்தக்க என்.ஐ.டி., முதல் முதல்வர்’ ஆகிய நூல்களை வெளியிட அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார். தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் சீனிவாச சுந்தர்ராஜன் பொன்விழா ஆண்டறிக்கையை வாசித்தார். தேசிய தொழில்நுட்ப கழக ஆளுமை குழு தலைவர் ராஜாராம் நித்தியானந்தா வரவேற்றார்.

விழாவில் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், என்.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ராஜன் நாராயணன் மற்றும் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவை முடித்துக் கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திருச்சியில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: