Home / இன்றைய செய்திகள் / படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி இலங்கை வரத் தீர்மானம்!!!

படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி இலங்கை வரத் தீர்மானம்!!!

1820810887Untitled-1பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் இராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ததுடன், ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

ஆகஸ்ட் 2-ம் திகதி படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி இலங்கை நோக்கி செல்லவும் முடிவு செய்துள்ளனர். இராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன், இராமேசுவரம் மீனவர்கள் தமிழ்நாடு கடலோர விசைப் படகு மீனவர் சங்க பொதுச் செயலர் என்.ஜே. போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராமேசுவரம் விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா புது டெல்லியில் மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறித்து விளக்கினார்.

மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்புத் தரவேண்டும். மீனவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையை மீட்க வேண்டும்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 55 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், அங்கிருந்து பேரணியாக ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். படகுகளின் உரிமங்களை ஆட்சியரிடமே ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இத் தகவல் ஆட்சியர் க.நந்தகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் அனைத்து மீனவர்களையும் உள்ளே அழைத்துச் சென்று விளக்கம் கேட்டார். தொடர்ந்து ஆட்சியர் நந்தகுமார் மீனவர்களிடையே பேசியதாவது,

தமிழக முதல்வர், மத்திய அரசிடம் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அனைத்து வழிகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல்வரே நேரடியாக இப் பிரச்சினையைத் தீவிரமாக கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்.

மீனவர்களுக்காக முழு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், படகுகளின் உரிமங்களை ஒப்படைக்கப் போவதாகக் கூறுவது, அரசுக்கு ஒத்துழைக்காதது போல் இருப்பதையே காட்டும். சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் மூழ்கி சேதமான படகுகளின் உரிமையாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமிக்குமாறு மீனவர்கள் கேட்டுக் கொண்டது குறித்து அரசுக்கு தெரிவித்து அதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும். எனவே, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அனைத்து மீனவர்களும் கலைந்து சென்றனர். பின்னர், மீனவர் சங்க பொதுச் செயலர் என்.ஜே.போஸ், செயலர் ஜேசு, நிர்வாகிகள் தேவதாஸ், எமரிட் ஆகியோர் கூறுகையில்,

கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 2-ம் திகதி படகுகளில் வெள்ளைக் கொடி கட்டிக் கொண்டு இலங்கை நோக்கி பயணம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதற்கு முன்னேற்பாடாக வரும் 29-ம் திகதி முதல் படகுகளில் வெள்ளைக் கொடியைக் கட்டி போராட்டத்துக்குத் தயாராவோம். இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தனர், என தினமணி செய்தி வௌியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: