Home / இன்றைய செய்திகள் / தென் கொரியா படகு விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளரின் உடல் அடையாளம் காணப்பட்டது!!

தென் கொரியா படகு விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளரின் உடல் அடையாளம் காணப்பட்டது!!

426efbaa-1195-4895-81e6-ea5915f5eb16_S_secvpfதென் கொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 476 பயணிகளை ஏற்றிச்சென்ற செவ்வோல் என்ற படகு அதிக சுமை காரணமாக கவிழ்ந்ததில் அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் உட்பட பெரும்பான்மையானோர் நீரில் மூழ்கி பலியாகினர். மொத்தம் 172 பேர் மட்டுமே இந்த விபத்தில் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மீதி அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன. விபத்து நடந்தபோது பயணிகளைக் காப்பாற்றாமல் ஊழியர்கள் தப்பித்தது வீடியோக் காட்சிகளில் தெரியவந்தது மக்களிடையே கோபத்தையும், வேதனையையும் தூண்டியது.

இந்த விபத்திற்குக் காரணமான படகின் உரிமையாளரான யூ பியுங் உன்(73) தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறியது அதிபர் பார்க் ஜியுன் ஹையின் அரசுக்கு பெரும் விமர்சனங்களை எதிர்க்கட்சியினரிடமிருந்து பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று பழத் தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் கிடந்த ஒரு பிணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் அருகில் யூ எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்று காலி மது பாட்டில்களும், மீன் எண்ணெய் பாட்டில் ஒன்றும் காணப்பட்டது. இந்த மீன் எண்ணெயும் யூவின் குடும்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இருப்பினும் அவரது டிஎன்ஏ மற்றும் விரல் ரேகைகளைப் பரிசோதித்து இறந்தவரது உடல்தான் யூவினுடையது என்பது இன்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. யூ எழுதிய புத்தகம் பிணத்தின் அருகில் இருந்தபோதும் அந்த உடலை அடையாளம் காணத் தவறிய இந்த வழக்கின் பொறுப்பினை ஏற்றிருந்த காவல்துறைத் தலைமை அதிகாரி இன்று பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பணக்காரத் தொழிலதிபராக அறியப்பட்ட யூ இந்தப் படகுத் தொழிலுக்கும் உரிமையாளராக இருந்துவந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை காவல்துறையினர் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றபோதும் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றனர். மருந்தாக்கவியல் சோதனைகளும் நடந்து வருவதாக காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் எஞ்சியிருக்கும் கேப்டன் உட்பட 15 படகுக்குழு உறுப்பினர்களும் கொலை, அலட்சியம் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: