Home / இன்றைய செய்திகள் / தென்னாபிரிக்காவிடம் 153 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது இலங்கை!!

தென்னாபிரிக்காவிடம் 153 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது இலங்கை!!

Sri-Lanka-v-South-Africa-at-Galleஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 153 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 16 ஆம் திகதி காலியில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்தவகையில் தனது தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க 455 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை மூன்றாவது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று சனிக்கிழமை(19) தொடர்ந்து ஆடிய இலங்கை அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதையடுத்து 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்களை சேர்த்து அதிரடியாக ஆட்டத்தை இடை நிறுத்தியது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 51 ஓட்டங்களும், பொப் டு பிளிஸ்சிஸ் 37 ஓட்டங்களும், குயின்டான் டி கொக் 36 ஓட்டங்களும், அம்லா 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை இலங்கை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் தரங்க (14 ஓட்டங்கள் ), ஸ்டெயின் வேகத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கௌஷல் சில்வாவும், சங்கக்காரவும் சரிவை தடுத்ததுடன், அணி நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நான்காம் நாளான நேற்று(19) ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சில்வா 37 ஓட்டங்களுடனும், சங்கக்கார 58 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதிநாளான இன்று ஞாயிற்றுக் கிழமை இலங்கையின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 260 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. எனவே இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்பட்டது. எனினும் தென்னாபிரிக்காவின் அதிரடி பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஸ்டெய்ன், மோர்கெல் ஜோடியின் வேகத்தில் இலங்கை 216 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இது தென்னாபிரிக்கா இலங்கையில் பெற்ற 3ஆவது டெஸ்ட் வெற்றியாகும். தென்னாபிரிக்கா வெற்றிக்குக் குறுக்கே வழக்கம் போல் சங்கக்கார நின்றார். ஆனால் அவர் 76 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

சங்கக்காரவிற்கு அடுத்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை. மஹேல ஜயவர்தனே(10 ஓட்டங்கள்), திரிமான(12 ஓட்டங்கள்), மெத்யூஸ்(27 ஓட்டங்கள்), சந்திமால்(1 ஓட்டங்கள்), பெரேரா(0 ஓட்டங்கள்) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

தென்னாபிரிக்க அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்டெய்ன் மற்றும் மார்கெல் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

ஸ்டெய்ன் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்டெய்ன், மோர்கெல் இருவரும் இணைந்து 16 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: