தலைகீழ்~!!

thalaikeezhநாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த கல்லூரியின் முதல்வரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார். ஆனால், அப்போது நாயகன் வந்து அந்த முதல்வரை காப்பாற்றி விடுகிறார். இதனால், நாயகன் மீது நாயகிக்கு காதல் வர ஆரம்பிக்கிறது. நாயகனும் அவள்மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறான்.

இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியான நிவேதாவுடன், தன்னுடைய நண்பர்கள் நெருங்கி பழகுவதை நாயகி எதிர்க்கிறாள். இதனால் நாயகி மீது நிவேதாவுக்கு வெறுப்பு வருகிறது. இந்நிலையில், அந்த கல்லூரியில் ஒரு மாணவி மர்மமான முறையில் இறந்து போகிறாள். அவள் தற்கொலைதான் செய்துகொண்டாள் என்று அந்த கல்லூரி முழுவதும் நம்புகிறது. ஆனால், நாயகனுக்கு மட்டும் இதில் ஏதோ மர்மம் அடங்கி இருக்கிறது என்று புலப்படுகிறது. ஒருநாள் நாயகியின் அறைக்கு செல்லும் நாயகன், அங்கு இறந்து போன மாணவியின் டைரியை பார்க்கிறான். அதில் ஜெமினி பாலாஜியின் பாலியல் தொந்தரவினால்தான் அவள் இறந்து போனது தெரிய வருகிறது.

இதை அறிந்ததும் ஜெமினி பாலாஜியை நேரில் சென்று மிரட்டி விட்டு வருகிறான் நாயகன். நாயகனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துவிட்டதை அறிந்த ஜெமினி பாலாஜி அவனை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையில், ஜெமினி பாலாஜி நிவேதாவுடன் நெருக்கமாக இருக்க நினைக்கிறார். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். அவளை கட்டிப்பிடிப்பதை ரகசியமாக படமும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெமினி பாலாஜி.

இந்நிலையில், ஒருநாள் வகுப்பறையில் அலங்கோலமாக இருக்கும் நிவேதாவை பார்க்கும் ராகேஷ், அவளின் மானத்தை காப்பாற்ற தனது சட்டையை கழற்றி கொடுக்கிறான். ஆனால், அவளோ தன்னை அவன் கெடுக்க வருகிறான் என கூறி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடுகிறாள். நாயகனுடைய நண்பர்களும், நாயகி தேஜாமையும் அவனின் இந்த செய்கையால் அவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள். நாயகன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகமும் அவனை டிஸ்மிஸ் செய்கிறது.

இறுதியில், நாயகன் தன் மீது விழுந்த பழியை தீர்த்தாரா? நாயகன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து நாயகி அவனுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ராகேஷுக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. சோகமான காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க ரொம்பவே திணறியிருக்கிறார். நாயகி தேஜாமை ஒரு சில காட்சிகளில் ஓரளவு நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பு வரவில்லை. நிவேதா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது. படத்தில் காமெடி என்ற பெயரில் கடுப்பை கிளப்பியிருக்கிறார்கள்.

இயக்குனர் ரெக்ஸ் ராஜ் படத்தில் எந்தவொரு காட்சியையும் ரசிக்கும்படி செய்யாதது, தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத பாடல்களை புகுத்தியிருப்பது என படத்தில் நிறைய சொதப்பலான விஷயங்களை செய்திருக்கிறார். கல்வியை வியாபாரமாக்குவது, படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் என சமூகத்தில் தற்போது நடக்கும் சம்பவங்களை கருவாக வைத்து படமாக்கிய இயக்குனர், அதை சரியாக சொல்ல தவறியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஆஷிஷ் உத்ரேயன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம். கே.டி.விமல் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘தலைகீழ்’ தலைவலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: