Home / இன்றைய செய்திகள் / தர்மபுரம் மத்திய கல்லூரிக்கு 6 கோடி செலவில் தொழிநுட்ப பாடப்பிரிவு!!

தர்மபுரம் மத்திய கல்லூரிக்கு 6 கோடி செலவில் தொழிநுட்ப பாடப்பிரிவு!!

370471818Untitled-1கிளிநொச்சி – தர்மபுரம் மத்திய கல்லூரியில் விரைவில் ஆறு கோடி ரூபா செலவில் தொழிநுட்ப பாடப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த பாடசாலை பிரதேசத்தில் ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றம் பெறுவதோடு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அடுத்ததாக மாவட்டத்தில் 1A சுப்பர் பாடசாலையாக தரம் உயர்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் 450 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதியினை திற்நது வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்குக் கிடைத்த தொழிநுட்ப பாடப்பிரிவு தற்போது தர்மபுரம் பாடசாலைக்கும் விசேடமாக கிடைக்கவுள்ளது.

இதன் மூலம் கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் மத்திய கல்லூரி ஒரு தலைசிறந்த பாடசாலையாக மாற்றம் பெறும்.

மீள்குடியேற்ற காலத்தில் இந்த பிரதேச மாணவர்கள் தங்களின் கல்விச் செயற்பாடுகளை பெரும் சிரமங்களின் மத்தியிலேயே மேற்கொண்டு வந்தனர்.

வகுப்பறை கட்டடங்கள் இன்மை, கற்றல் உபகரணங்கள் இன்மை, பாடசாலைகளில் ஆய்வு கூட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் தங்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால் இன்று அந்த நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரம் மகாவித்தியாலயத்தை மத்திய கல்லூரியாக தரம் உயர்த்தி உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கான கோரிக்கையினை இந்த கல்விச் சமூகம் எங்களிடம் முன்வைத்த போது, நாம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தர்மபுரம் மகாவித்தியாலயத்தை தர்மபுரம் மத்திய கல்லூரியாக தரம் உயர்த்தியதோடு உயர்தர கணித விஞ்ஞானப் பிரவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது இந்த பிரதேச மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அது மாத்திரமன்றி ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் தர்மபுரம் உள்வாங்கப்பட்டு மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் உள்ளிட்ட பல வளங்களை பெற்றுள்ளது பெற்றுக்கொள்ளவும் உள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேச மாணவர்கள் பெறும் நவீன வசதிகளுடன் கூடிய கல்விச் செயற்பாடுகளை எமது மாவட்ட மாணவர்களும் பெறும் வகையில் யுத்தத்தின் பின்பு கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறைக்கு பலவேறு வசதி வாய்ப்புகளையும் பௌதீக வளங்களையும் அரசு வழங்கிவருகிறது, எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: