Home / இன்றைய செய்திகள் / இந்திய அருட்சகோதரிகளின் தொண்டுள்ளம்: உயிருக்கு பயந்து காஸாவை விட்டு ஓட மாட்டோம்!!

இந்திய அருட்சகோதரிகளின் தொண்டுள்ளம்: உயிருக்கு பயந்து காஸாவை விட்டு ஓட மாட்டோம்!!

fd7dd07e-d3ef-4ca6-a479-2892b0a14f36_S_secvpfஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.

இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.

கடந்த 13 நாட்களாக காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்.

உச்சகட்ட போர் நடக்கும் காஸா பகுதியில் தையற் கலைஞர்களாக வேலை செய்தபடி, அங்கேயே வசித்து வந்த 4 இந்தியர்களை ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகளின் உதவியுடன் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் இருக்கும் இந்திய தூதரக பிரதிநிதிகள் நேற்று மீட்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வேலை தேடிச் சென்ற சில பெண்கள், அங்குள்ள பாலஸ்தீனியர்களை திருமணம் செய்துக் கொண்டு, கணவன் குழந்தைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் இந்த பெண்களையும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஆனால், இவர்களில் பெரும்பாலான குடும்பத் தலைவிகள் தங்களின் கணவன் மற்றும் பிள்ளைகளை பிரிந்து செல்ல தயாராக இல்லை என்று மறுத்துள்ளனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண், காஸாவை சேர்ந்த பாலஸ்தீனியரை திருமணம் செய்துக் கொண்டு அவரது 6 குழந்தைகளுக்கு தாயாகி, காஸாவின் கான் யூனிஸ் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

தாயகம் திரும்புவது பற்றி அந்த பெண் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகம் எங்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு செல்வது தொடர்பாக தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி வருகிறது. என் குழந்தைகளையும், கணவரையும், அவரது உறவினர்களையும் தனியாக தவிக்க விட்டு செல்வதை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பல கன்னியாஸ்திரி பெண்கள் அருட்சகோதரிகளாக மாறி காஸா பகுதியில் இங்குள்ள அன்னை தெரசா தொண்டு மையத்தில் மாற்றுத் திறனாளிகள், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகள், வயதான அனாதை முதியவர்கள் ஆகியவர்களை பராமரிக்கும் கருணை இல்லங்களில் சேவை செய்து வருகின்றனர்.

காஸாவில் இருந்து வெளியேறி தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் இவர்கள், ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களை நம்பியுள்ள ஊனமுற்ற குழந்தைகளையும், வயதான முதியவர்களையும் பிரிந்துச் செல்வதை எண்ணிப் பார்க்கும் போதே மனதுக்கு என்னவோ போல் இருக்கிறது.

நாங்கள் இந்தியாவுக்கு போகப் போவதில்லை. என்ன நடந்தாலும் சரி. நாங்கள் இவர்களுடன் இங்கேயே தான் இருப்போம்’ என்று இந்த தொண்டின் திலகங்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: