Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / (PHOTOS) வவுனியா கிடாச்சூரிக்கு பஸ் இருந்தும் பயனில்லை: பயணிகள் அவலநிலை!!

(PHOTOS) வவுனியா கிடாச்சூரிக்கு பஸ் இருந்தும் பயனில்லை: பயணிகள் அவலநிலை!!

unnamed (10)வவுனியா நகரில் இருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கிராமமே கிடாச்சூரி. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக் கிராமத்தைச் சூழ ஈஸ்வரிபுரம், மறவன்குளம், தரணிக்குளம் போன்ற கிராமங்கள் உள்ளன. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றிய இடங்களே இவை. இக் கிராமங்களில் 1000 வரையிலான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்களில் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலைகளே செய்கின்றனர். இக் கிராம மக்கள் வங்கிகள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வைத்தியசாலை, சந்தை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் என எல்லாச் செயற்பாடுகளுக்கும் நகருக்கே வரவேண்டியுள்ளது. உயர்தர மாணவர்கள் கூட சில கிலோமீற்றர்கள் சென்றே கல்வி கற்கவேண்டியுள்ளதுடன் சில மாணவர்கள் நகரப் பாடசாலைகளிலும் கல்வி கற்கின்றனர். இவ்வாறு நகருடன் இணைந்த செயற்பாடுகளை கொண்டதாக காணப்படும் இக் கிராம மக்கள் நகருக்கு தமக்கு தேவையான நேரங்களில் வந்து தமது வேலைகளை செய்யமுடியாத நிலையில் உள்ளனர். அவ்வளவு தூரம் இக் கிராம மக்களின் போக்குவரத்து காணப்படுகின்றது என கிராம மக்கள் கூறுகின்றனர். இக் கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் செல்வதில்லை. தனியார் பேரூந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளன. அவையும் தமது சேவை நேரத்தை கருத்தில் கொள்ளாது சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இக் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், கிடாச்சூரில இருக்கிற நான் கவர்மன்ற் வேலை செய்யுறன். என்ர அலுவலகம் ரவுன்ல தான் இருக்கு. நான் 7.05க்கு கிடாச்சூரி பஸ்சில ஏறிடுவன். ஆனா அவங்க ஒரு மணித்தியாலயத்திற்க போக வேண்டிய தூரத்தை 9 மணிக்கு தான் கொண்டே விடுவார்கள். யாழ்காணம் இருந்து வாறவர் கூட இப்ப 2மணித்தியாலத்தில வவுனியா வந்திர்ராரு. ஆனா நம்மட பஸ்களுக்கு தான் 14 கிலோமீற்றருக்கு 2 மணித்தியாலம் எடுக்குது. இதால நான் வேலைத்தளத்திற்கு பிந்திப் போறதாக பிரச்சனை வேறு எனக்கு. என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், தனியார் ஊழியர்கள், நோயாளிகள் எனப் பலரையும் கருத்தில் கொண்டு போக்குவரத்திற்கான நேர அட்டவணை அமைக்கப்பட்டுள்ள போதும், சேவையில் ஈடுபடும் பஸ்கள் உரிய நேரத்திற்கு கிடாச்சூரியில் இருந்து அல்லது வவுனியா நகரில் இருந்து வெளிக்கிடுகின்ற போதும் இடையில் மெல்ல மெல்லமாக பஸ்சை செலுத்தி அடுத்த பஸ் போய் சேரவேண்டிய நேரத்திற்கே செல்கின்றார்கள். இதனால் இந்த பஸ் சேவையை நம்பி பயணம் செய்யமுடியாதுள்ளது என பயணிகள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவி ஒருவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், நான் தரணிக்குளத்தில இருக்கிறனான். வவுனியா நகர் பாடசாலையில தான் படிக்கிறன். கிடாச்சூரி பஸ்சில தான் வாறனான். கிடாச்சூரியில் இருந்து 6.30 க்கு முதலாவது பஸ் வெளிக்கிடும். அதில ஏறினா தான் பள்ளிக்கூட ரைம்மிக்க கோகலாம் என ஏறினாலும் வெல் அடிச்ச பிறகு தான் அந்த பஸ் வவுனியா நகருக்கு வருகிறது. பிறகு என்ன வழமைபோல பிந்திப் போனதால அதிபர் பேசுவா. கேட்டிட்டு போய் வகுப்பில இருக்க வேண்டியது தான். இந்த பஸ்சால தினமும் நான் ஸ்கூல்ல பேச்சுவாங்க வேண்டி இருக்கு என்றார். இப் பாதையில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தமது சேவை நேரத்தை கவனத்தில் கொள்ளாது அடுத்த பஸ் சேவை நேரத்தையும் தாமே எடுத்து மெதுவாக ஒடுவதால் பஸ்சில் சனம் கூடி நெரிசல் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். கடந்த சனிக்கிழமை அதிக சனத்தை ஏற்றிவிட்டு பஸ்ஸை மெதுவாக செலுத்தியமையால் மாணவன் ஒருவன் மயக்கமடைந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகள், கர்பிணித்தாய்மார்கள், கைக்குழந்தையுடன் சிகிச்சைக்காக வருவோர் என பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். உரிய நேரத்திற்கு போய்ச் சேராமையால் 50 ரூபாய் பணத்தை கொடுத்து இரண்டு மணித்தியாலங்கள் பஸ்சில் இருந்து நெருக்குப்படவேண்டியுள்ளது. வைத்தியசாலை கிளினிக்குக்கு கூட போகமுடியாத நிலை உள்ளது என்கின்றார் கர்ப்பிணி தாயொருவர். இந்த கிராமங்களுக்கு 07 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ள போதும் அதன் சேவை சீரானதாக இல்லை. இவற்றில் காலை, மதியம், மாலை நேரம் பயணம் செய்யும் பஸ்களிலேயே சனம் கூட. அதால அந்த நேரங்களை கவனத்தில் கொண்டு சனத்தை ஏற்ற தான் முயல்கிறார்களே தவிர மக்களை கவனத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலாளர், பொலிசார், தனியார் பஸ்சங்கம் ஆகியவற்றுக்கு கிராம மக்கள் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. நான் மாலை வேலை முடிந்து 5.30 பஸ்சில் வவுனியா நகரில் ஏறினால் அந்த பஸ் கிடாச்சூரி போய் சேர்ந்து நான் பஸ்சை விட்டு இறங்கி வீட்ட போகுமுன் 7 மணி பஸ் வந்திரும். 7 மணிபஸ் வேகமாக வருகிறது என்றால் 5.30 பஸ்சால் ஏன் முடியாது? என பஸ்சில் பயணம் செய்யும் தனியார் துறை ஊழியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இப் பிரச்சனைகள் தொடர்பில் வவுனியா தனியார் பஸ்சங்கத் தலைவர் ம.இராஜேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பஸ்சில் பயணிகள் போதாமையால் உரிய நேரங்களுக்கு சில பஸ்கள் செல்லமுடிவதில்லை. சனம் இல்லாமல் பஸ்சை ஓடமுடியாது. அவர்களும் பஸ் லீசிங் கட்டனும். பாதையும் சீராக இல்லை. மற்றம்படி எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றார். வேலைக்கு செல்வோர், மாணவர்கள், வைத்தியசாலை செல்வோர் என்போரை கருத்தில் கொண்டு தனியார் போக்குவரத்தை அந்த நேரத்திற்காவது சீராக நடத்தவேண்டும். அல்லது இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் ஆவது அந்த நேரத்தை கவனத்தில் கொண்டு சேவையில் ஈடுபடவேண்டும் என மக்கள் கோருகின்றனர். எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே, போக்குவரத்து என்பது இன்று மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கும் கூறாக மாறிவிட்ட நிலையில், இப் பிரதேச மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதே பாதிக்கப்பட்ட கிராம மக்களின் எதிர்பார்பாகும்.

unnamed (11) unnamed (12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: