Home / இன்றைய செய்திகள் / ரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது!!

ரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது!!

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், செயற்படும் தேர்தல் ஆணையகத்தின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாக நாம் கருதுகிறோம்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்க அமைச்சர்கள் காட்டாமாக உள்ளார்கள். இது இன்று அதிகரித்துள்ளது.

இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர்தான். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்கச்சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம் பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை. இன்று அவர் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை. எமக்கும் அப்படி ஒரு சார்பு நிலை தேவைப்படவும் இல்லை.

அவர் சார்பு நிலை எடுப்பாரெனில் மக்கள் நலன் சார்ந்ததாகவும், ஜனநாயகம் சார்ந்ததாகவே இருக்கின்றது. இந்த அடிப்படையில் இலங்கையிலும், இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவர் மீதான ஏற்புடைமை பழுதுபடாமல் இருக்கின்றது.

நாடு திரும்பியுள்ள, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு, ரத்னஜீவன் ஹூலின் மீது புதிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

அவரையும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி முடக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது.

இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன.

மென்மேலும் நகைப்புக்கு ஆளாக வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: