Home / இன்றைய செய்திகள் / முன்னாள் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியின் வெளிப்படுத்தல்!!

முன்னாள் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியின் வெளிப்படுத்தல்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து தனக்கு புலனாய்வு பிரிவின் தகவல் கிடைத்ததாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினாலும் அவருக்கு ஏப்ரல் 7 ஆம் திகதியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு உளவுத்துறை குறித்து தகவலை வழங்கியதாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் 12 ஆவது நாளாகவும் நேற்று (17) சாட்சியம் அளித்த நிலந்த ஜயவர்தன மேலும் கூறுகையில், தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னும், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னைய நாளிலும் அரச புலனாய்வு சேவைக்கு பொறுப்பான தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அரச புலனாய்வு சேவையின் பலவீனம் காரணமாக அந்த தாக்குதலைத் தடுக்க முடியாது போனதாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து அரச புலனாய்வு பிரிவுக்கு முதல் எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 10.40 அளவில் வெளிநாட்டு புலனாய்வுதுறை அதிகாரியின் வாட்ஸ்அப் செய்தி மூலம் தான் முதலில் எச்சரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதன் பின்னர் தனக்கு கிடைத்த அந்த தகவலை பொலிஸ் பரிசோதகர் ஹிமாலி ஊடாக புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளருக்கும் உதவி பணிப்பாளருக்கும் தெரியப்படுத்தி அதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தாம் உத்தரவிட்டதாகவும் கூறினார்.

இந்த தகவல் புலனாய்வு தகவலா என உறுதிப்படுத்திக்கொள்ள அரச புலனாய்வு பிரிவின் சிறப்புக் குழு கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜயவர்தன கூறினார்.

பின்னர் ஏப்ரல் 5 ஆம் திகதி நண்பகலுக்குள், ஆரம்பத் தகவல்களை வழங்கிய நபரிடமிருந்தும் பிற தகவலறிந்தவர்களிடமிருந்தும் தாக்குதல் குறித்த ஆரம்ப தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.

இதன்போது பிரதி சொலிசிட்டர் நாயகம் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் ஏப்ரல் 06 திகதி நான்கு தடவைகள் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதை சுட்டிக்காட்டி முதலாவது புலனாய்வு தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதா? என கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஜயவர்தன ஏப்ரல் 06 திகதி தனது மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் ஏனெனில் ஏப்ரல் 04 ஆம் திகதி தனக்கு கிடைத்த புலனாய்வு தகவலை உறுதிப்படுத்தி கொள்ளாமையே அதற்கு காரணம் எனவும் கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி காலை 8.55 க்கு அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொலைபேசியில் அழைத்து Top Secret என குறித்த தகவலை தெரிவித்ததாகவும், அதே நாளில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே அதே தகவல்களை தேசிய புலனாய்வு பிரவின் தலைவரிடம் சொன்னதாகவும் ஜயவர்தன சாட்சியம் அளித்தார்.

ஜயவர்தன மேலும் கூறுகையில், ஏப்ரல் 09 க்குள் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் மற்றும் பதில் மற்றும் உதவி பணிப்பாளர்களின் அறிக்கைகள் கிடைத்ததால், மேலதிக அறிக்கை தயாரிக்கப்பட்டு பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

முக்கியமான தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டன என்று முதல் புலனாய்வு தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது தொடர்பாக அரச புலனாய்வு அதிகாரிகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் அவரிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், ஏப்ரல் 04 அன்று பெறப்பட்ட முதல் புலனாய்வு தகவலின் பேரில் 05 ஆம் திகதி அன்று சமர்ப்பித்த அறிக்கையில் தற்கொலைத் தாக்குதல் நடந்த திட்டமிடப்பட்ட இடமாக இருந்த கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரை படத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலதிக ஆதாரங்களை வழங்கி சாட்சியமளித்த அவர், சஹரான் ஹாசிமிடம் தாக்குதலை நடத்தும் எண்ணம் இருப்பதாக 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தாலும், சஹ்ரான் ஹாசிம் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதிக்குள் தாக்குதலுக்குத் தயாராகுவார் என்ற தெளிவான தகவல்கள் எதுவும் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை என கூறினார். .

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினரான நீதிபதி ஒருவர், குண்டுவெடிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரச புலனாய்வு பிரிவு விசாரித்துக்கொண்டிருக்கும் போது பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு அரச புலனாய்வு பிரிவின் பலவீனம் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, தாக்குதலுக்கு முந்தைய நாள், முதல் ஆறு தாக்குதல்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு பேர் இருப்பதாகவும், ஒரு தேவாலயத்தின் அருகே ஒரு குண்டு லொறி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

அரச புலனாய்வு பிரிவின் பங்களிப்பு பலவீனமாக உள்ளது என்று கூறுவது ஏற்புடையதல்ல எனவும் அரச புலனாய்வு பிரிவு வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்கியிருக்கிறது ஆகவே அதனை அவர்களின் பலவீனமாக கருத முடியாது எனவும் கூறினார்.

இதேவேளை, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று 13 ஆவது முறையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: