Home / இன்றைய செய்திகள் / சுற்றுலா துறை மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பு!!

சுற்றுலா துறை மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பு!!

சுற்றுலா துறையின் மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாட்டில் ஏற்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (07) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய கனக்க ஹெரத், மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் விமான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது குறித்து கோட்டாபய ராஜபக்ஷ தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதாகவும் அதனூடாக மேலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ள தமது அரசாங்கத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

மத்தல விமான நிலையத்தில் தென் ஆசியாவில் தலைச்சிறந்த பொறியலாளர்கள் பிரிவு ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழில்வாய்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, ரணில், சஜித் மற்றும் மங்கள ஆகியோரின் கபட ஜெனிவா ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய கூடிய ஒரே வழி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என கூறினார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, காத்தான்குடி முஸ்லிம்கள் சஹ்ரானுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம் மாற்றியது தற்போதைய அரசாங்கம் என குற்றம் சுமத்தினார்.

கபீர் ஹசிமின் செயலாளர் மாவனெல்ல பகுதியில் உள்ள புத்தபெருமானின் சிலையை உடைத்த போது பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக சஹ்ரானின் உதவியாளர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவரை சென்று பார்வையிட்டாரா என கேள்வி எழுப்பிய அவர், ரவூப் ஹக்கீம் போன்றோர் முஸ்லீம்களை காட்டிக்கொடுத்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது பிரிவினைவாதம் எந்தவடிவத்தில் வந்தாலும் அதனை தோற்கடிக்க கூடிய இயலுமை கோட்டாபயவிடம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது மக்களின் கைகளில் பணம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

ஆனால் அது குறித்து கவனம் செலுத்தாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பழிவாங்கும் செயற்பாட்டை மாத்திரம் முன்னெடுத்தாக கூறினார்.

பின்னவல பகுதியில் விலங்குகள் சாரணாலயம் ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதனை அழித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எனவே தனது அரசாங்கம் மீண்டும் ஊருவானவுடன் முதலில் பின்னவல பகுதியை சுற்றுலா தளமாக மாற்றியமைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ சுற்றுலாதுறை மூலம் நாட்டுக்கு பாரிய வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அதற்கு அரசாங்கத்தின் தலையிடுவது மிக முக்கியம் என கூறினார்.

இந்தியா முதல் சீனா வரை இன்று சுற்றுலா பயணிகள் வியாபித்துள்ளதாகவும் இந்த நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்த முடியும் எனவும் கூறினார்.

அப்படி செய்வதன் ஊடாக தற்போது 7 வீதமாக காணப்படும் சுற்றுலாதுறையின் வருமானத்தை 10 வீதம் வரை அதிகரிக்க முடியும் எனவும் அதற்கு அரசாங்கம் தலையிட்டு சுற்றுலாதுறைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் பல தொழில்வாய்புகளை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: