Home / இலக்கியம் / *ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

43 copy
*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை)

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்த பின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள்.

பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு?

இன்னும் சிலர் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கடவுளை திருப்திப்படுத்தி தாம் நினைப்பதை அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால் கோயிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் பூசகர்கள் அனைவரும் இறை நிலை அடைந்திருப்பார்கள் அல்லவா?

ஆகவே உண்மையான ஆன்மீக முன்னேற்றம் என்பது என்ன?

ரிஷிகளும் சித்தர்களும் தரும் பதில் தபஸ் அல்லது தவம் மற்றும் சாதனா அல்லது சாதனை. இந்த இரண்டுமே ஒருவனது உணர்வை உயர் நிலை அடையச்செய்ய முடியும்.

தவம் என்பது தன்னை சுயகட்டுப்பாடு மூலம் கடுமையான சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளல். ஆசனங்கள் செய்வது, உணவினை தவிர்த்து விரதம் இருப்பது, சோர்வின்றி மன உற்சாகத்துடன் மலை ஏறுதல், கிடைப்பதை மட்டும் உண்ணல் என்பவை தவத்தின் உதாரணங்களாகும்.

இதன் மூலம் உடல், மனம் என்பவற்றில் ஏற்படும் துன்பங்களை சகித்து மனதை விரக்தி இன்றி உற்சாகத்துடன் இருக்கும் மனப்பண்பு ஒருவனுக்கு ஏற்படும். இப்படி பண்படுத்திய மனதையும் உடலுமே சாதனையில் செல்லுவதற்கு உதவும், அனேகர் இவற்றையே ஆன்மீகம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவை மனதையும் உடலையும் பண்படுத்தும் புடம் போடும் ஆரம்ப பயிற்சிகளே.

சாதனை அல்லது சாதனா என்பது ஒருவன் தனது சுயமுயற்சியுடன் தன்னை சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சுய முன்னேற்றமடையச் செய்து, தெய்வ குணங்கள் உடையவனாக தன்னை உருமாற்றம் செய்யும் முயற்சி சாதனா எனப்படுகிறது.

ஒருவன் சாதனா மூலம் மனப்பாங்கு எப்போதும் நேர் எண்ணங்கள் உடையதாகவும், மனம் விரிவடைந்து எல்லாவற்றையும் ஏற்று சிந்தித்து புரியும் ஆற்றல் உள்ளதாகவும், உயர்ந்த குணங்களை மனப்பண்புகளையும் உருவாக்கும் செயல்முறையை செய்கிறான்.

ஆக சுருக்கமாக சாதனை என்பது ஒருவன் தனது ஆளுமையில் தூய்மையை கொண்டுவந்து, தனது செயல்கள் நேர்மையுடனும், உணர்ச்சிகளுடனும் எண்ணத்திலும் ஞானத்துடனும், செய்கையில் தர்மத்துடனும் சரியான செயல்களை செய்யும் மனப்பக்குவம் உள்ளவனாக மாறுதலே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம்.

இப்படி ஒருவன் செய்தால் அதுவரை தான் அல்லது நான் என்று அவன் எண்ணிக்கொண்டிருந்த வட்டம் விரியத்தொடங்கும். இதை உணர்வு சக்தி அல்லது சேதன சக்தி என்று சொல்லுவார்கள். இந்த உணர்வு சக்தி சாதரணமானவர்களில் நான் ராமன், இன்னாருடைய மகன், இந்த வேலை செய்கிறேன், இந்த ஜாதியை சேர்ந்தவன், என்ற அடிப்படையில் தாம் ஏற்படுத்திக்கொண்ட அபிமானங்களின் அடிப்படையிலேயே செயல்புரிகிறது.

ஆனால் சாதனையால் தன்னை விரிவு படுத்திக்கொண்ட ஒருவனின் உணர்வு சக்தி மெதுவாக விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு சக்தியாக மாறுகிறது. தான் என்ற உணர்வை பிரபஞ்ச உணர்வாக விரிவடைய செய்யும் செயல் முறையே ஆன்ம விஞ்ஞானத்தின் இலக்காகும்.

இன்று நவீன விஞ்ஞானம் பௌதீக ஜட சக்திகளைப் பற்றி ஆராய்வதிலேயே தமது இலக்கினை நிர்ணயிக்கின்றன. ஆனால் ரிஷிகளும் சித்தர்களும் உணர்வு சக்தியை எப்படி கையாள்வது என்றே ஆராய்ந்தனர். இந்த விஞ்ஞானமே ஆன்ம விஞ்ஞானம் எனப்பட்டது. இந்த விஞ்ஞானத்தை சுயமாக பரிசோதிக்கும் பயிற்சியே சாதனை அல்லது சாதனா எனப்பட்டது.

ஆன்ம விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகளில் ஒன்று உணர்வு சக்தி மனிதனின் மனதின் ஒரு பாகமான புத்தியின் மூலம் செயல் கொள்ளுகிறது என்பது. மனதின் மற்றொரு பாகம் புலன் கள் வழி செயல்பட ஒருபாகம் உணர்வு வழி செயற்ப்படுகிறது.

உண்மையில் எந்த ஒருமனிதனது அறிவுத்திறன் என்பது அவனது உள்ளத்திலிருந்து வரும் உணர்வு சக்தி மனதிற்கு தரும் ஆற்றலே, இந்த ஆற்றலை மனிதன் மனதின் மூலம் தனது சுக போகங்களுக்காகவும், சூழ்ச்சிகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறான்.

ஆக எல்லா மனிதர்களிலும் புத்தியை செயற்படுத்த உணர்வு சக்தி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் இந்த உணர்வு சக்தி மனதின் பிடியில் சிக்கிவிடாமல் உலகை உயர்விக்கும் எண்ணங்களை தோற்றுவிப்பதற்கு மனிதன் தன்னை பயிற்றுவிக்கும் பயிற்சியே சாதனை. இதுவே ஆன்மீகம்.

இறைவழிபாடு ஒழுக்கத்தையும் அறநெறியையும் கற்பிக்கிறது. இதுவே முற்றுமுழுதான ஆன்மீகம் எனக் கூறுவது தவறாகும்.

இவ் உணர்வு சக்தியை உணர்வதற்கு நாமும் முயல்வோம்..

தொகுப்பு.
அ/நி. துரைராஜா சுவேந்திரராஜா.
(ஞானநெறி ஆசிரியர். மனவளக்கலை மன்றம். சுவிற்சர்லாந்து.
முன்னாள் பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு)

(“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

(*** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் 28.03.2018 அன்று நடத்தப்படட “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகியது இது… ** “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகிய அனைத்து விபரங்களும் தொடர்ச்சியாக இந்த இணையத்தில் பிரசுரமாகும்.)

43 copy

44 copy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: